Published Date: June 23, 2024
CATEGORY: LEGISLATIVE ASSEMBLY

நலவாரியம் மறுசீரமைப்பு மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொழிலாளர்கள் குடும்பத்துக்கு அரசு நலத்திட்ட உதவிகள்-அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பெருமிதம்.
கேள்வி நேரத்தின்போது விடுதலை சிறுத்தைகள் கட்சி உறுப்பினர் பனையூர் பாபு (செய்யூர்), கேபிள் டிவி ஆபரேட்டர்களுக்கு தனி நலவாரியம் அமைக்க அரசு முன்வருமா? என்ற கேள்வி எழுப்பினார். அதற்கு தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அளித்த பதில் வருமாறு:
கருணாநிதி தனது ஆட்சி காலத்தில் 2007 ஆம் ஆண்டு நலவாரிய தலைவர்கள் உறுப்பினர்களை அறிவித்தார்கள். ஆனால் 10 ஆண்டு கால அ.தி.மு.க ஆட்சியில் கேபிள் டிவி ஆபரேட்டர்களும், தொழிலாளர்களும் பலமுறை கோரிக்கை விடுத்தும் கூட வாரியமும் அதன் செயல்பாடுகளும் முடக்கப்பட்டது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தி.மு.க அரசு மீண்டும் பொறுப்பேற்ற பின்னர் தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஆப்பரேட்டர்கள் மட்டுமில்லாமல் அனைத்து கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கத்தோடு கடந்த ஆட்சியில் கேபிள் டிவி தொழிலாளர்கள் நல வாரியமாக இருந்ததை ஆபரேட்டர்களையும் உள்ளடக்கி இதனை மறுசீரமைப்பு செய்து இந்த வாரியத்துக்கு தலைவர், உறுப்பினர்கள் மற்றும் உறுப்பினர் செயலர் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் இந்த வாரியத்துக்கு புதிய உறுப்பினர்களை தேர்ந்தெடுத்திடவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் தொழிலாளர்களின் குடும்பத்தினர் பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பெறுவதற்கு வகை செய்யப்பட்டுள்ளது. அரசு கேபிள் டிவி ஒரு காலத்தில் 70 லட்சம் வாடிக்கையாளர்களை வைத்திருந்தது. மீண்டும் அதனை நோக்கி ஒரு திட்டத்தை வைத்திருக்கிறோம்.
இவ்வாறு அவர் பதிலளித்தார்
Media: DAILYTHANTHI